உத்தரப் பிரதேசத்தில் ஒரு விரைவு நீதிமன்ற நீதிபதி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 22 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. பல்வேறு கொலை வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளித்து வரும் முஷாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரவிகுமார் திவாகரின் இந்த நடவடிக்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது. 46 வயதான ரவிகுமார் திவாகர், உத்தரப் பிரதேசத்தின் முஷாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கெனவே பல முக்கிய வழக்குகளில் துணிச்சலான உத்தரவுகளை பிறப்பித்தவர் என கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு வாராணசி கியான்வாபி மசூதி தொடர்பான வழக்கு அவரது முன் விசாரணைக்கு வந்தபோது, அந்த வளாகத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டதும் இவர்தான். இந்நிலையில், சமீப காலமாக அவர் விசாரித்த பல்வேறு கொலை மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் அடுத்தடுத்து மரண தண்டனை தீர்ப்புகள் வெளியாகியுள்ளன. ஊர்க்காவல் படை வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை 2-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளி தீபக்கிற்கு மரண தண்டனை விதித்தார்.
அதேபோல், வழிப்பறியுடன் தொடர்புடைய கொலை வழக்கில் ஜூலை 17-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 12 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவிகுமார் திவாகர், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதித்தார். இவ்வாறு பல்வேறு வழக்குகளில் தொடர்ந்து கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மொத்தம் 22 பேருக்கு அவர் மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்ற வழக்குகளில் விரைவான விசாரணை மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது குறித்து நீதித்துறை வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
Also Read: Mac பயனர்களுக்கு ஆப்பிள் எச்சரிக்கை.. ஹேக்கர்கள் குறிவைக்கும் அபாயம்.. உடனே இதை செய்யுங்கள்!



