உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முழுமையாகத் தடை விதித்துள்ளது. கோயிலின் புனிதம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும், சாமி சன்னதிகள் மற்றும் பிரகாரங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில், கோயில் வளாகத்தில் 5 இடங்களில் பிரத்யேகப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்கள், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்கள் மற்றும் தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடம் என இந்த மையங்கள் செயல்படவுள்ளன.
பக்தர்கள் தங்களது அலைபேசிகளை ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சுவாமி மற்றும் அம்மன் தரிசனம் முடிந்த பிறகு, அந்த டோக்கனைக் காண்பித்துத் தங்களது செல்போன்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



