மூன்றாம் உலகப் போர் அல்லது பெரும் இயற்கை பேரிடர்கள் நேர்ந்தாலும் தங்களது விலைமதிப்பற்ற கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், உலகப் பெரும் பணக்காரர்களுக்காக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அதிநவீன பிரம்மாண்ட பாதாளப் பாதுகாப்புப் பெட்டகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற புரூனிக் மலைப்பகுதியில் (Brunig Pass), ‘புரூனிக் மெகா சேஃப்’ (Brünig Mega Safe AG) என்ற தனியார் நிறுவனம் இந்த மெகா தற்காப்பு அரண் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. திடமான பாறை மலைக்கு அடியில் சுமார் 330 அடி (100 மீட்டர்) ஆழத்தில் பிரம்மாண்ட சுரங்கங்களை அமைத்து, அணுஆயுத தாக்குதல்கள், சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களாலும் துளிகூடச் சேதமடையாத வகையில் இந்த அதிபாதுகாப்புப் பெட்டகங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 24 பிரத்யேகப் பாதாள அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு சிறிய அளவிலான அறையை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுப்பதற்கான ஆரம்ப விலையே சுமார் ரூ.5.8 கோடி (5 லட்சம் சுவிஸ் ஃபிராங்க்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் தேவைக்கேற்ப வசதிகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான சொகுசு அறைகளின் விலை ரூ.140 கோடி வரை எட்டுகிறது.
இது வெறும் சாதாரணப் பாதுகாப்பு லாக்கர் மட்டுமல்லாமல், தங்கம், வைரங்கள் மட்டுமின்றி அரிய ஓவியங்கள், வரலாற்றுப் பொருட்கள் மற்றும் பழமையான ஒயின்கள் கெட்டுப்போகாத வகையில் சீரான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பராமரிக்கும் தானியங்கி தொழில்நுட்ப கட்டமைப்பை கொண்டுள்ளது. வெளியுலக தொடர்பே துண்டிக்கப்பட்டாலும் தடையின்றி இயங்கும் காற்று சுத்திகரிப்பு அமைப்புகள், தன்னாட்சி மின் உற்பத்தி வசதிகள் மற்றும் ஃபெராரி, லம்போர்கினி போன்ற ஆடம்பரக் கார்களை நேரடியாக உள்ளே கொண்டு செல்லும் சுரங்கப் பாதைகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
அமைதியான ஆல்ப்ஸ் மலைப் பகுதியான லங்கெர்னில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அப்பகுதிக்குக் கணிசமான வரி வருவாயை ஈட்டித் தரும் என்றாலும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகமே பேரிடரில் சிக்கி அழிந்தாலும் பெரும் பணக்காரர்கள் மட்டும் தங்களது சொத்துக்களையும் சொகுசு வாழ்க்கையையும் தக்கவைத்துக்கொள்ள இத்தகைய பாதாளக் கோட்டைகள் வழிவகுப்பதாக இணையதளங்களில் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.



