ராஜஸ்தானில் கணவருடனான திருமண வாழ்க்கைக்கு இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த 27 வயதான மகேஷ், கவிதா மீனா (23) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த உறவுக்கு மகேஷ் இடையூறாக இருப்பதாக கருதிய இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஆபத்தான விஷ மாத்திரையான ‘செல்ஃபோஸ்’டை ஜூஸில் கலந்து மகேஷுக்கு கவிதா கொடுத்துள்ளார்.
ஜூஸை அருந்திய சிறிது நேரத்திலேயே மகேஷின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து, சம்பவத்தை மறைக்க முயன்ற கவிதா, தனது கணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவரது சகோதரர் மணீஷுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் மகேஷை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முதற்கட்டமாக மகேஷின் மரணம் இயற்கையானது என குடும்பத்தினர் கருதிய நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி அவரது தந்தை பாபுலால், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின்போது கவிதாவின் பதில்களில் முரண்பாடுகள் இருந்ததால், போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், மகேஷின் மரணத்திற்குப் பின்னால் கவிதா மற்றும் கணேஷ் இருப்பது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜெய்ப்பூர் மேற்கு துணை ஆணையர் பிரசாந்த் கிரண் தலைமையிலான போலீஸார் கவிதா மற்றும் கணேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read: வீட்டுப்பாடம் செய்யாத 6 வயது சிறுவன்.. சட்டையை கழற்றி ஆசிரியர் செய்த காரியம்.. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!



