தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் க. சபரி ஐங்கரன். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 29-வது வயதில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான சபரி ஐங்கரன், தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக உள்ளார்.
கல்லூரிப் பருவத்திலிருந்தே சமூக சேவை மற்றும் அரசியல் சார்ந்த பணிகளில் ஆர்வம் கொண்டிருந்த சபரி ஐங்கரன், கடந்த 2016-ம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கம் மூலம் தனது பொதுப்பணியைத் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர், தேனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பேற்று கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதியில் 85,656 வாக்குகள் பெற்று, 19,321 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், சபரி ஐங்கரன் தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறவினர் ஒருவர், “கலப்புத் திருமணத்தை திராவிடர் கொண்டு வந்தனர்” என்ற கருத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். அந்த ஸ்டேட்டஸ் தனது குடும்பத்தை குறிவைத்து வைக்கப்பட்டதாகக் கருதிய சபரி ஐங்கரன், அதனை உடனடியாக நீக்க வேண்டும் என தனது உறவினரிடம் கடுமையாக பேசியுள்ளார்.
தொலைபேசி உரையாடலில், “மிரட்டுறியா?” என எதிர்முனையில் இருப்பவர் கேட்க, “ஆமா, மிரட்டுறேன்… தெரியலையா?” என சபரி ஐங்கரன் பதிலளிக்கும் வகையில் உரையாடல் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஸ்டேஷனில் சொல்லித் தூக்கி உட்கார வைப்பேன்… சத்தியமா நைட் தாண்ட மாட்டீங்க…” எனவும், காவல்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தனது குடும்பம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை உடனடியாக நீக்குமாறு சபரி ஐங்கரன் வலியுறுத்தியுள்ளார். தனிப்பட்ட குடும்ப விவகாரம் தொடர்பாக தனது உறவினரிடம் எம்.எல்.ஏ. கடுமையான வார்த்தைகளில் பேசியதாக வெளியாகியுள்ள இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, காவல்துறை நடவடிக்கை எடுக்கச் செய்வதாகவும், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள இந்த உரையாடல் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



