தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்வைத்ததாக கூறப்படும் திட்டங்களில் ஒன்றாக பேசப்பட்டு வரும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளையும், அவர்களின் தாய்மார்களையும் கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்துக்கான கொள்முதல் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் கடந்த ஜூலை 14-ம் தேதி கோரியது.
மொத்தம் 11 நிறுவனங்கள் TN Tenders Portal மூலம் இதில் பங்கேற்று தங்களது விலைப்புள்ளிகளை சமர்ப்பித்தன. ஒரு கிராம் தங்கத்தின் விலை தனியாக கணக்கிடப்படும் நிலையில், மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS தரமுத்திரை உள்ளிட்ட கூடுதல் செலவுகள் அனைத்தையும் சேர்த்து ரூ.0.01 என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்தபட்ச விலையை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலைப்புள்ளி குறித்து மற்ற நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே அதே விலைக்கு பணியை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திட்டத்தின் தொடக்க கட்டமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை வழங்குவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 30 சதவீதமும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் பயனடைவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
Also Read: வரதட்சணையாக SUV கார் கேட்டு கொடுமை… 1.5 மாத குழந்தை கொடூர கொலை!!!



