திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். நேரு தான் ரேஷன் அரிசியையே உணவாக உட்கொள்வதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், நடைமுறையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற முறையில் ரேஷன் அரிசி விநியோகிக்கப்படுவதாகப் பரவலான புகார்கள் எழுந்துள்ளன என அவர் குறிப்பிட்டார். இத்தகைய குறைகளைக் களைந்து, பொதுமக்களுக்கு உயர்தரமான உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்குவதற்கு முதலமைச்சர் விஜய் உரிய துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் உறுதி அளித்தார்.
மேலும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மிகவும் கண்ணியத்துடனும் மாண்புடனும் அவையில் முன்வைத்து விவாதித்து வருவதாகத் தெரிவித்தார். ஆனால், இதற்கு மாறாக எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் தொடர்ந்து கூச்சலிடுவதும், அவையின் மையப்பகுதிக்கு ஓடிவந்து ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டதாகச் சாடினார். குறிப்பாக, அமைச்சர்கள் பதிலளிக்கும் தருணங்களில் முன்னாள் அமைச்சர்கள் பின்வரிசையில் அமர்ந்துகொண்டு தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து அவையை ஒரு சண்டைக்களமாக மாற்றத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்றும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.
நடப்பு ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாக நிலைநிறுத்தப்பட்டு, அனைத்துத் தரப்பு உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அவைக் குறிப்பிலிருந்து தேவையற்ற சொற்களை நீக்குவது சட்டமன்ற மரபு எனவும், சபாநாயகர் தனது நடுநிலையான பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் எனவும் தெரிவித்தார்.
Read More : பெயருக்கு பதில்… அசிங்கப்படுத்திய உணவகம்!. பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!.



