அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,03,265 அமெரிக்க டாலர்களாக உயர்த்த டிரம்ப் அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தப் புதிய திட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்கான செலவை கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்களுக்கே இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வரைவுத் திட்டம், திங்களன்று அமெரிக்காவின் ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம், விசா உச்சவரம்புக்கு உட்பட்ட ஹெச்-1பி மனுக்களுக்கும், உயர்கல்வி விலக்கு பெறும் மனுக்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இதேபோன்று அறிவிக்கப்பட்ட 1 லட்சம் டாலர் கட்டண உயர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதற்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் புதிய பரிந்துரை வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றாலும், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் சட்டரீதியான சவால்களைப் பொறுத்தே இதன் எதிர்காலம் அமையும்.
இந்தியர்களுக்கு பெரும் சிக்கல்: இந்தக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், ஹெச்-1பி பணியாளர்களை ஸ்பான்சர் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும். ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங் (OPT) எனப்படும் பயிற்சியின் மூலம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு பணிக்குச் செல்லும் சர்வதேச மாணவர்களையும் இந்தப் புதிய கட்டண முறை பாதிக்கும்.
2024 ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 3,99,402 ஹெச்-1பி விசாக்களில் 71% விசாக்களை இந்தியர்களே பெற்றுள்ளனர். தற்போது அமெரிக்காவில் 5.2 மில்லியன் இந்திய வம்சாவளியினர் வசிப்பதால், இந்த விசா நடைமுறை மாற்றங்கள் இந்தியாவுக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
புதிய கட்டணத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் குடிவரவு அமைப்பை நிர்வகிக்கத் தேவையான “வருவாயை உருவாக்குவதே” என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் நிதி, USCIS
, சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP), குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் (ICE), வெளியுறவுத் துறை மற்றும் தொழிலாளர் துறை ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கும், மோசடி தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கக் குடிவரவு விதிகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய பரிந்துரைகளும் அமைந்துள்ளன. முன்னதாக, வேலை இழந்த ஹெச்-1பி விசா பணியாளர்களுக்கு வழங்கப்படும் 60 நாள் சலுகைக் காலத்தை ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது இறுதி செய்யப்பட்டால், பணிநீக்கம் செய்யப்படும் வெளிநாட்டவர்கள் உடனடியாக அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.



