கன்னட நடிகர் யஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள ‘டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து யஷ் திரைக்குத் திரும்பியுள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இப்படத்தில் யஷின் திரை ஆளுமை, டார்க் மற்றும் ஹை-ஆக்டேன் சண்டைக் காட்சிகள் மற்றும் ஸ்டைலான காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதாக எக்ஸ் தள பயனர்கள் பாராட்டி வருகின்றனர். இது ஒரு “காட்சி மற்றும் ஒலியின் மிருகம் போன்ற படம்” என்றும், திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டிய அனுபவம் என்றும் ரசிகர்கள் வர்ணித்துள்ளனர்.
படத்தின் முதல் பாதி அதீத எதிர்பார்ப்புகளையும், நாடகப் பாணியிலான உறவுச் சிக்கல்களையும் கொண்டு ‘இன்டேன்ஸ்’ ஆக இருப்பதாகப் பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இயக்குநர் கீது மோகன்தாஸின் பணியை அனைவரும் பாராட்டி வருவதுடன், இப்படத்திற்கு CBFC அமைப்பின் ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரண்டாம் பாதி வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல், ஒரு கலைநயம் மிக்க உளவியல் த்ரில்லர் பாணியில் நகர்வதாகவும், இதன் கிளைமாக்ஸ் திருப்பம் மிகுந்த உணர்ச்சிகரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.



