திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் விபரீதமாக முடிந்துள்ளது. 32 வயது பெயிண்டரை காரில் மோதி கீழே தள்ளிய மர்ம கும்பல், பின்னர் ஆயுதங்களுடன் விரட்டி சென்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெங்கல் அருகே உள்ள சிற்றத்தூரைச் சேர்ந்த மாரி என்ற ரூபன் (32), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், சமீபத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதனால், வெங்கல் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் போலீஸ் நிலையத்திற்கு சென்ற மாரி, தனது நண்பர் வெங்கடேசனுடன் மோட்டார் சைக்கிளில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி புறப்பட்டுள்ளார். பாகல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியுள்ளது.
கார் மோதியதில் இருவரும் சாலையில் விழுந்த நிலையில், காரில் இருந்த 5 பேர் உடனடியாக வெளியேறியுள்ளனர். அவர்களிடம் இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பார்த்த மாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டியுள்ளது.
தாக்குதலில் மாரியின் கை மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன், முகத்திலும் கொடூரமாக வெட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே, கொலைக்குப் பிறகு கும்பல் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்கள் சென்ற கார் அருகிலிருந்த வீட்டின் சுவரில் மோதி நின்றது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கீழானூரைச் சேர்ந்த தீனா (25), நரேஷ் (20), விக்கி என்ற கலாநிதி (23) ஆகியோர் முதலில் சிக்கினர். பின்னர், தப்பியோடிய மேலானூரைச் சேர்ந்த பேரரசு (19), ராஜ்குமார் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கொலைக்கான பின்னணி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தீனாவின் சகோதரி தீபாவுக்கும் மாரிக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் கள்ளத்தொடர்பே முக்கிய காரணமாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தீபாவின் குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், அவரது கணவர் அவரை தாக்கி தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
பின்னர், கடந்த டிசம்பர் மாதம் தீபா தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இதனால் தனது சகோதரியின் மரணத்திற்கு மாரியை பொறுப்பாக்கி, அவரை கொலை செய்து பழிதீர்க்க தீனா திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்! ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்…



