நடிகை கவுதமி தொடர்புடைய நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலதிபர் அழகப்பன், நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதம் அழகப்பனுடன் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்ததாகக் கூறப்படும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன்படி நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அழகப்பனிடம், அதிகாரிகள் நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் பணப்புழக்கம் குறித்து நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தின் தொடக்கம் கடந்த 2023-ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரில் உள்ளது. சென்னை காவல் ஆணையரிடம் நடிகை கவுதமி அளித்த புகாரில், ஸ்ரீபெரும்புதூரில் தனக்குச் சொந்தமான 46 ஏக்கர் நிலம் தொடர்பாக மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி என்றும், ரூ.6 கோடி கொடுத்து நிலத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிலப் பரிவர்த்தனையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அமலாக்கத்துறையின் விசாரணையும் தொடங்கியது.
தற்போது அழகப்பன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற நபர்களின் பங்கு குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்! கைபேசியில் 500 அரசு சேவைகள் பெற சூப்பர் ஆப் அறிமுகம்..



