நேபாளத்தின் வடக்கு பகுதியில் திபெத் எல்லையையொட்டி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் நீர்வரத்து காரணமாக ராசுவா மாவட்டத்தில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தின் முழுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் போதே கோசி ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த வெள்ளநீர் திபெத் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமுரே மற்றும் சியாப்ருபேசி உள்ளிட்ட எல்லையோர குடியிருப்புகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ராசுவா மாவட்ட நிர்வாக அதிகாரி நரேந்திர பரியார் கூறுகையில், பல கிராமங்கள் மற்றும் அங்கு நடைபெற்று வந்த உள்கட்டமைப்பு திட்டப் பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தின் வேகத்தில் ஏராளமான வாகனங்கள், வணிகப் பொருட்கள் மற்றும் தனியார் உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. ராசுவா சுங்கத்துறை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சமீபத்தில் கட்டப்பட்ட பாலம் ஒன்றும் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், சாலைகள் மற்றும் மின் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ராசுவா மட்டுமின்றி நுவாகோட், தாதிங், சித்வான் மற்றும் கோர்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு செல்லுமாறும், ஆறுகள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளின் அருகே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதே கோசி ஆற்றில் திபெத் பகுதியிலிருந்து திடீரென அதிகளவு வெள்ளநீர் வந்துள்ளதால், திரிசூலி ஆற்றுப் படுகையைச் சேர்ந்த பகுதிகளிலும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நேபாள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நேபாள ராணுவம், ஆயுதப்படை மற்றும் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். திரிசூலி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவசர மருத்துவ மீட்புக் குழுவினருடன் MI-17 ஹெலிகாப்டர் ஒன்றும் திரிசூலி மாவட்ட மருத்துவமனை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. நிலைமையை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நேபாள பிரதமர் பலேந்திர ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, ராசுவா மாவட்டத்தில் புதன்கிழமை குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை என அந்நாட்டு நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனால், திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே போதேகோசி பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் ராசுவா மாவட்டத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருந்தனர். அப்போது, இதுவரை கண்டறியப்படாத பனிப்பாறை ஏரி திடீரென உடைந்து அதிகளவு நீர் வெளியேறியதே வெள்ளத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சம்பவமும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் (GLOF) காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: இயற்கை.. ஆர்கானிக்.. தூய்மை! விளம்பரத்தை மட்டும் நம்பாமல் இதை கட்டாயம் கவனிங்க..



