நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு இயற்கையாக உருவாகியுள்ள ஒரு பிரமாண்ட தடுப்பு ஏரி தற்போது நிரம்பி வழிவதாகவும், அடுத்த சில நாட்களில் அது உடையும் அபாயம் உள்ளதாகவும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சீன நீர்வள அமைச்சகத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இன்று காலை நிலவரப்படி இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் நீர் இந்த ஏரிக்குள் வந்து சேரும் என கணிக்கப்பட்டுள்ளதால், ஏரியின் கரை உடைந்து கீழ்நோக்கிப் பாயும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திபெத்தில் உற்பத்தியாகும் சோச்சென் மற்றும் புருபு ஆகிய நதிகள் நேபாள எல்லைக்குள் நுழையும் சங்கமப் பகுதியில் இந்த ஏரி உருவாகியுள்ளது. இந்நதிகள் நேபாளத்தில் ‘போதேகோசி ஆறு’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற திரிசூலி ஆற்றுடன் இணைகின்றன.
நேபாளத்தின் ரசுவா மாவட்டம், திமுர் மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் கோர வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்து, நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில், இந்த புதிய தடுப்பு ஏரி அச்சுறுத்தல் மீட்புப் பணிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏரி உடைந்தால் கீழ்நோக்கிப் பாயும் காட்டாற்று வெள்ளம் கரையோர குடியிருப்புகளையும் கட்டமைப்புகளையும் மீண்டும் புரட்டிப் போடும் என்பதால், முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, செயற்கைக்கோள் மற்றும் வெள்ள மாதிரி ஆய்வுகள் மூலம் இந்த ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : போதைப்பொருள் பழக்கத்தை தடுக்க.. இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அந்த மெசேஜ்..!!


