இந்திய அணி இதுவரை மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2007-ல் எம்.எஸ். தோனி, 2024-ல் ரோஹித் சர்மா மற்றும் 2026-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனான சூர்யகுமார் யாதவ், தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு சவாலான கட்டத்தில் உள்ளார். தேசிய அணியில் தனது இடத்தை இழந்திருந்தாலும், மீண்டும் அணியில் இடம் பிடிப்பதற்காகக் கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவுடனான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தனது முதல் வருமானம் மற்றும் தற்போதைய நிலை குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். தனது முதல் வருமானம் குறித்துப் பேசிய சூர்யகுமார், “மும்பைக்காக முதன்முதலில் 15 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் விளையாடியபோது எனக்கு 15,000 ரூபாய் கிடைத்தது. அது அந்தத் தொடர் முழுமைக்குமான ஊதியமாகும். அந்தப் பணத்தை நான் அப்போதே முழுவதும் செலவழித்துவிட்டேன். அந்தச் சமயத்தில் எனக்கு பேட் ஸ்பான்சர்கள் யாரும் இல்லை. எனவே, எனக்குக் கிடைத்த வருமானத்தை எல்லாம் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்கே செலவிட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அணியில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன? இந்தியாவுக்கு மூன்றாவது டி20 உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த சில மாதங்களிலேயே, சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், சமீபகாலமாக ரன் குவிக்கத் திணறி வரும் அவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அடுத்த உலகளாவிய தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இளம் வீரர்களை உள்ளடக்கிய புதிய அணியை உருவாக்கும் தேர்வுக் குழுவின் திட்டமாக உள்ளது. சூர்யகுமார் கடைசியாக 2023-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அணிக்குத் திரும்புவாரா?
‘ப்ரோ கோவிந்தா லீக்’ (Pro Govinda League) தொடரின் விளம்பரத் தூதராகச் செயல்பட்டு வரும் சூர்யகுமாரிடம், மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எனது முழு உழைப்பையும் கொடுத்து வருகிறேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடந்தால், எதிர்காலத்தில் அனைத்தும் சரியாக அமையும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதற்கிடையே, சூர்யகுமார் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் இன்னும் முடிந்துவிடவில்லை என பிசிசிஐ வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. “சூர்யகுமார் யாதவிற்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன. அவர் தற்போது அணியின் எதிர்காலத் திட்டங்களில் இல்லை என்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தொடர்ந்து ரன்களைக் குவித்தால், அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவதற்குத் தகுதியானவரே” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.



