நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 400 ஆக அதிகரித்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்டத்தில் 103 தமிழர்கள் மட்டுமே சிக்கியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்தில், சென்னை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பயண முகமைகள் மூலம் 103 பேர் ஆன்மீகச் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றிருந்தனர். அவர்களில் கும்பகோணம் முகமை வாயிலாகப் பயணித்த 21 தமிழர்கள் மட்டும் முதற்கட்டமாக பத்திரமாக மீட்கப்பட்டுச் சென்னை வந்தடைந்துள்ளனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மார்க்கமாக தனியாகப் பயணித்த 140 பேர் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
இவர்கள் தவிர, குடும்பங்களாகவும் சிறு குழுக்களாகவும் தனியாகப் பலர் நேபாளத்திற்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திலிருந்து சென்றவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது. இவர்களில் 21 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்; 140 பேர் பாதுகாப்பாக உள்ள நிலையில், எஞ்சியுள்ளவர்களில் சுமார் 90 பேரின் தற்போதைய நிலை மற்றும் இருப்பிடம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களைத் தொடர்பு கொண்டு பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புக் குழுக்களும் வெளியுறவுத் துறையும் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read More : ஓயாத சோகம்.. யாருமே கேட்கல..! 229 உடல்களை நல்லடக்கம் செய்த நேபாள அரசு..!



