திருச்சி தீரநகரை சேர்ந்தவர் 38 வயதான சம்பத்குமார். மிளகு பாறை பகுதியில் பீடா கடை நடத்தி வரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது தாய்மாமன் மகளான கவிதாவை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கவிதா தினமும் சமைத்து தனது கணவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்வது வழக்கம்.
தனது வீட்டில் இருந்து சமையல் செய்து, உணவை எடுத்துக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது கணவனின் கடைக்கு தினமும் அவர் இருசக்கர வாகனம் அல்லது பேருந்து மூலம் செல்வதுண்டு. இந்நிலையில் சம்பவத்தன்று, வழக்கமாக 1 அல்லது 1.30 மணிக்குள் சாப்பாடு எடுத்துச் செல்லும் கவிதா அன்று வெகு நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் பசியில் இருந்த சம்பத்குமார் ஆத்திரமடைந்துள்ளார். மேலும் அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மனைவி இன்னும் வீட்டில் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் கவிதாவிடம் ஏன் இன்னும் உணவு கொண்டு வரவில்லை என்று தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சம்பத் குமார் தேங்காய் உரிக்கும் கம்பியால் கவிதாவின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கவிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து அவர் தனது மனைவியை அருகில் உள்ள RJ என்ற தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார்.
இதனிடையே அவர் நடந்த சம்பவம் குறித்து கவிதாவின் தாய் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவிதாவிடம் மீண்டும் ஏன் எனக்கு நீ நேரத்திற்கு உணவு கொண்டு வரவில்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு விடாமல் அவர் அங்கிருந்த கூர்மையான பொருள் ஒன்றை எடுத்து கவிதாவின் கை, தோள்பட்டை, வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் கடுமையாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கவிதா அலறி துடித்துள்ளார். கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பத் குமாரை தடுத்து நிறுத்தி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த கவிதா மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கவிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த கவிதாவின் பெற்றோர் தனது மகளிடம் வரதட்சனை கேட்டு சம்பத்குமார் சித்திரவதை செய்ததாகவும், அதனால் தான் தங்களின் மகளை கொலை செய்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் சம்பத்குமாரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: “என்னோட பொண்டாட்டி குளிக்கிறத நீ எதுக்கு பாக்குற?” ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்!



