நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள பணகுடி அருள்மிகு ஸ்ரீ ராமலிங்கசுவாமி திருக்கோயில், ராமாயண வரலாற்று தொடர்புகொண்ட புகழ்பெற்ற புண்ணியத் தலமாக விளங்குகிறது. பழங்காலத்தில் ‘பாண்டியபுரம்’ என அழைக்கப்பட்ட இவ்வூரின் அருகே, சஞ்சீவி பர்வதத்தை அனுமன் சுமந்து சென்றபோது அதன் துகள்கள் விழுந்து உருவானதாக கருதப்படும் புனித மகேந்திரகிரி மலை அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
இலங்கையில் ராவணனை வதம் செய்த பின் நாடு திரும்பிய ஸ்ரீ ராமர், பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் சிவபெருமானின் அருள் பெறவும் அனுமன் நதிக்கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் இத்தல இறைவன் ‘அருள்மிகு ராமலிங்கேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘ஸ்ரீ சிவகாமியம்மை’ என்றும் அழைக்கப்படுகின்றனர். தொடக்கத்தில் ஈசன் மட்டுமே அருள்பாலித்த இக்கோயிலில், பிற்காலத்தில் கிணறு தோண்டியபோது பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சுயம்பு அம்பிகை சிலை விமரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. 14ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இவ்வாலயத்தை புனரமைத்துக் கட்டியதற்கான சான்றாக கல்வெட்டுகளிலும் தூண்களிலும் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இத்திருக்கோயிலில் நடத்தப்படும் சிறப்பு வழிபாடுகள் பல்வேறு பலன்களைத் தரும் சக்தி வாய்ந்தவையாக போற்றப்படுகின்றன. சித்திரை மாத சிறப்பு அபிஷேகங்கள் விவசாய விளைச்சலையும் மழை வளத்தையும் பெருக்குவதாகவும், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்குச் செய்யப்படும் சிறப்புப் பூஜைகள் தீராத கடன் சுமைகளை அகற்றுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள வாராஹி தேவி பக்தர்களின் பிணிகளையும் நோய்களையும் தீர்த்து அருள்பாலிக்கிறார். திருமணத் தடையால் அவதிப்படுவோர் சிவகாமியம்மைக்கு பச்சை நிறப் பட்டுச்சேலை, பொட்டுத் தாலி மற்றும் மல்லிகை பூ மாலை அணிவித்து வேண்டி கொண்டால், வெகுவிரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தை மாத பிரம்மோற்சவ தேரோட்டம், தெப்பத் திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாணம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களாகும். மன அமைதி, குடும்ப வளம் மற்றும் எடுத்த காரியங்களில் வெற்றி பெற விரும்பும் பக்தர்கள், நெல்லை-குமரி மார்க்கத்தில் பயணிக்கும்போது அவசியம் தரிசிக்க வேண்டிய தலமாக பணகுடி ராமலிங்கேஸ்வரர் கோயில் திகழ்கிறது.
Read More : தமிழ்நாடு ஆளுநர் மாற்றம்? முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவரா? யார் இந்த கிருஷ்ணகுமார் ரெட்டி?



