வெனிசுலாவில் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.. இவை பல பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் கராகஸில் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்..
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவு கொண்டதாக இருந்தது. இதன் மையம் கராகஸிலிருந்து மேற்கே சுமார் 168 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோரோன் நகருக்கு மேற்கே, கரீபியன் கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
அதன்பின் சிறிது நேரத்திலேயே, அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவு கொண்ட இன்னும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் மோரோனுக்கு தென்மேற்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் மையங்கொண்டிருந்ததாகவும், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.. கராகஸில், கட்டிடங்களிலிருந்து அவசரமாக வெளியேறிய மக்கள் தெருக்களில் கூடினர். சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் இருந்த பொருட்கள் வெளியே தெரிந்தன. இத்தகைய பரவலான சேதங்களைக் கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கமாக பரபரப்பாக இயங்கும் தலைநகரின் இரண்டு பகுதிகளில் பெரிய அளவிலான தூசு மேகங்கள் எழுவதையும் காண முடிந்தது.
கடந்த ஒரு நூற்றாண்டில் வெனிசுலா சந்தித்த மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிந்து மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த நிலநடுக்கம் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஸ்பெயினிடமிருந்து வெனிசுலா சுதந்திரம் பெற வழிவகுத்த 1821-ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ வெற்றியின் ஆண்டுவிழாவைக் கொண்டாடும் நிகழ்வுகளில் மக்கள் ஈடுபட்டிருந்த தேசிய பொது விடுமுறை நாளன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெனிசுலாவின் பல மாநிலங்களிலும் நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ தெரிவித்தார். கராகஸின் அல்டமிரா மாவட்டத்தில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படும் அதிர்வுகள் (aftershocks) கட்டிடங்களுக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மக்கள் கட்டிடங்களுக்குள் செல்லாமல் வெளியிலேயே இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த பேரிடரில் சிலர் காயமடைந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட கபெல்லோ, ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுக்கள் தடையின்றிச் செல்ல ஏதுவாக வாகன ஓட்டிகள் சாலைகளைத் தெளிவாக வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கபெல்லோ அரசுத் தொலைக்காட்சியில் பேசிய போது “மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்; ஆனால், மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்க, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள்; ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.” என்று தெரிவித்தார்..



