2027-28 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை வரவிருக்கும் அக்டோபர் 12 முதல் மத்திய நிதியமைச்சகம் தொடங்க உள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்துவதற்கான சீர்திருத்தங்களைத் தொடர்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பது ஆகியவை இந்த நிதி ஆண்டின் பட்ஜெட்டின் முக்கிய இலக்குகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலகல்களுக்கு நடுவே இந்த வரவிருக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒரு முக்கிய அம்சமாகும்.
பொருளாதார விவகாரத் துறை வெளியிட்டுள்ள 2027-28 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சுற்றறிக்கையின்படி, செலவினச் செயலாளர் தலைமையில் நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் அக்டோபர் 12 அன்று தொடங்குகின்றன. நிதி ஆலோசகர்கள் தேவையான விவரங்களை அக்டோபர் 6 அல்லது அதற்குள் யூனியன் பட்ஜெட் தகவல் அமைப்பில் (UBIS) சரியாக உள்ளிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தரவுகளைச் சரிபார்ப்பதற்காகக் குறிப்பிட்ட வடிவங்களில் அவற்றின் ஆவணங்களை (Hard copies) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அக்டோபர் 12 தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரை தொடரும்.
மத்திய பட்ஜெட் 2027; என்ன எதிர்பார்க்கலாம்?
சர்வதேச மோதல்கள், எரிசக்தி நெருக்கடி மற்றும் தொடர்புடைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு பட்ஜெட் வரவுள்ளது.
கடந்த ஆண்டு, நிதியமைச்சர் 3 கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். முதலாவதாக, உற்பத்தி மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துவதன் மூலமும், உலகளாவிய நிலையற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதன் மூலமாகவும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதும் நிலைநிறுத்துவதும் ஆகும்.
இரண்டாவது கடமை, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதும், அவர்களின் திறனை வளர்ப்பதும், இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் அவர்களை வலுவான பங்காளிகளாக்குவதும் ஆகும்.
மூன்றாவது கடமை, ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஒவ்வொரு குடும்பமும், சமூகமும், பகுதியும் மற்றும் துறையும் வளங்கள், வசதிகள் மற்றும் வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதாகும்.
உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் முதலீடு: உலகளாவிய வர்த்தகம் நிச்சயமற்ற தன்மையுடன் பதற்றமாகவே இருப்பதால், உள்நாட்டு உற்பத்தி, விநியோகச் சங்கிலி மீளுருவாக்கம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிச் சார்பைக் குறைப்பது ஆகியவற்றிற்கு மத்திய பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கக்கூடும். நாட்டை தன்னிறைவு பெறச் செய்யும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ (Atma Nirbhar Bharat) இலக்கை நோக்கி இது ஒரு முன்னெடுப்பாக இருக்கும்.
எரிசக்தி மற்றும் பணவீக்கம்: புவிசார் அரசியல் பதட்டங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளன. இதனால் நாடு அதிக எரிபொருள் விலை மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருட்களின் விலைகளைக் கையாள போராடி வருகிறது.
உணவுப் பொருட்களின் விலை அபாயங்கள் பட்ஜெட்டின் அனுமானங்களையும் செலவுக் முன்னுரிமைகளையும் பாதிக்கலாம். எனவே, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வணிகங்களையும் நுகர்வோர்களையும் விலை அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
அரசு செலவினங்கள்: செலவின் அளவை விட அதன் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். துறைகள் தங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், திட்டங்களை நியாயப்படுத்தவும் நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மூலதனச் செலவு : உள்கட்டமைப்பு மற்றும் பொது மூலதனச் செலவுகள் முக்கியமான வளர்ச்சி இயக்கிகளாக இருக்கும். 2026-27 பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்காக ரூ.12.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு தனது 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மூலதன விலக்கல் (disinvestment) மற்றும் ரூ. 80,000 கோடி சொத்து monetisation இலக்கில் சுமார் 78 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களுக்குள்ளேயே இது சாத்தியமாகியுள்ளது.



