தனியாக பயணம் செய்யும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. கனமழைக்கு மத்தியில் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆம்னி பேருந்தில் லிஃப்ட் கேட்ட 16 வயது சிறுமியை, அதில் இருந்த இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமி, நொய்டாவில் வசிக்கும் தனது உறவினரை சந்திக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
செல்லும் வழியில் கிரேட்டர் நொய்டாவின் பரி சௌக் பகுதிக்கு வந்த சிறுமிக்கு, அடுத்து எவ்வாறு செல்வது என்பது தெரியாமல் சிரமப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த காலியான படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்தை பார்த்த அவர், கைகாட்டி உதவி கேட்டுள்ளார்.
பேருந்தில் இருந்த ஓட்டுநரும் உதவியாளரும் தாங்கள் நொய்டா செக்டர் 63 நோக்கிச் செல்வதாக சிறுமியிடம் தெரிவித்துள்ளனர். தன்னை செல்லும் வழியில் இறக்கிவிடுமாறு சிறுமி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அவரை பேருந்தில் ஏற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பேருந்தில் இருந்தவர்களில் ஒருவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், தொடர்ந்து இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என இருவரும் மிரட்டியதாகவும், மீறினால் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பேருந்து சுமார் 47 கிலோமீட்டர் பயணித்த பின்னர், பழைய டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் ISBT அருகே ரிங் ரோட்டில் சிறுமியை இறக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
அங்கிருந்து தப்பித்த சிறுமி நேராக காஷ்மீர் கேட் காவல் நிலையத்தை அடைந்து, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்றவுடன் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
பேருந்து சென்ற பாதையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதன் அடிப்படையில் வடக்கு டெல்லியின் திமர்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்குரிய இருவரையும் கண்டுபிடித்தனர். குல்தீப் மற்றும் சந்தீப் என அடையாளம் காணப்பட்ட இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயன்படுத்திய ஆம்னி பேருந்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணையில், சம்பந்தப்பட்ட பேருந்து பழுதடைந்திருந்ததால் கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூர் பகுதியில் உள்ள பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பழுதுபார்க்கும் பணி முடிந்த பின்னர், குல்தீப்பும் சந்தீப்பும் அந்தப் பேருந்தில் திமர்பூர் நோக்கி திரும்பியபோதுதான் பரி சௌக் பகுதியில் சிறுமியை சந்தித்துள்ளனர்.
மேலும், பேருந்தின் வெளிப்புறத்திலிருந்து உள்ளே இருப்பவர்களை எளிதில் பார்க்க முடியாத வகையில் அதன் அமைப்பு இருந்ததாகவும், இதனால் பேருந்துக்குள் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை உடனடியாக வெளியில் தெரியாமல் போனதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தனியாக பயணம் செய்யும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அவசர சூழ்நிலையில் உதவி தேடும் பெண்கள் மற்றும் குழந்தைகள், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து உதவி பெறும்போது எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் குறித்தும் இந்த சம்பவம் எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: அதிர்ச்சி!!! 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! சாக்லேட் கொடுத்து அத்துமீறிய கேப் டிரைவர் கைது..



