இன்றைய நவீன வாழ்க்கை முறையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் பாக்கெட் சிப்ஸ், குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் குழந்தைகளின் அன்றாட உணவாக மாறி வருவது அவர்களது உடல் நலனுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் மற்றும் தின்பண்டங்களில் அதிகப்படியான உப்பும் கலோரிகளும் நிறைந்துள்ளதால், அவை குழந்தைகளின் உடல் எடையை மளமளவென அதிகரிக்கச் செய்கின்றன.
எனவே, இவற்றிற்கு மாற்றாக வீட்டில் வறுத்த கொண்டைக்கடலை அல்லது தாமரை விதை (மக்கானா) போன்றவற்றை குழந்தைகளுக்குச் சிற்றுண்டியாக வழங்குவது ஆரோக்கியமான தேர்வாக அமையும். அதேபோல், அதிகளவு சர்க்கரை கலந்த பாக்கெட் பழச்சாறுகள், சோடா மற்றும் குளிர்பானங்களுக்குப் பதிலாக, வீட்டில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பழச்சாறு அல்லது பசும்பால் கொடுப்பதே குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது.
பெரும்பாலான வீடுகளில் மிகச் சாதாரணமாகக் கருதப்படும் பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் டோனட்கள் அதிகளவு கொழுப்பையும் தேவையற்ற சர்க்கரையையும் உடலுக்குள் சேர்க்கின்றன. பிஸ்கட் சிறியதாக இருப்பதால் பாதிப்பில்லை என எண்ணாமல், அவற்றுக்குப் பதிலாக நற்பழங்கள் மற்றும் வீட்டுத் தின்பண்டங்களைக் கொடுக்க வேண்டும். மேலும், அவசரத் தேவைகளுக்காக உருவாக்கப்படும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள், பாரம்பரிய வீட்டுச் சமையலுக்கு மாற்றாக மாறிவிடக் கூடாது. இவற்றைக் கூடுமானவரை தவிர்த்து, தினசரி உணவில் பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பர்கர், பீட்சா மற்றும் எண்ணெயில் பொரித்த துரித உணவுகள் (Fast Food) சுவையானதாக இருந்தாலும், அவற்றை எப்போதாவது மட்டுமே அனுமதிக்க வேண்டும். குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பதற்கு வெறும் பாக்கெட் உணவுகள் மட்டுமே காரணமல்ல; போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் மாற்றமடைந்த வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்குவதுடன், குழந்தைகளைத் திறந்தவெளி விளையாட்டுகளிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபட வைப்பதே அவர்களின் எதிர்கால நலனை உறுதிசெய்யும் சிறந்த வழியாகும்.
Read More : BREAKING | என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன்..!! ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மெஸ்ஸி..!!



