கேரளாவில் ஒருவயது பெண் குழந்தையின் உடலுக்குள் ஊசி இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது இந்த ஊசி குழந்தையின் உடலிலேயே விட்டுச் செல்லப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோழிக்கோடு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் – அஞ்சு தம்பதியரின் குழந்தைக்கு, கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில் வலது விலா எலும்புப் பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த ஊசி அகற்றப்பட்டது.
அதாவது, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பிறந்த இக்குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது வலது விலா எலும்பு பகுதியில் வீக்கம் இருந்ததை பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், அது சாதாரண வளர்ச்சி தான் என்றும் சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், தொடர்ந்து வலி மற்றும் அழுகையால் அவதியுற்ற குழந்தைக்கு, கடந்த ஜூலையில் மீண்டும் தீவிர வலியும் வீக்கமும் ஏற்பட்டது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, உடலுக்குள் நீண்ட நாட்களாக ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
குழந்தைக்கு வேறு எந்த அறுவை சிகிச்சையோ அல்லது நீண்ட கால மருத்துவமனை சிகிச்சையோ அளிக்கப்படாததால், கோட்டயம் NICU பிரிவில் இருந்தபோதே இந்தத் தவறு நடந்திருக்க வேண்டும் என குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடமும் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர். புகாரைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


