வீட்டிலிருந்தே வேலை செய்வது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து இரண்டு வாரங்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்ததில் தனது மூளையே ‘செயலிழந்து நொந்துபோய்விட்டது’ என புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
புனேவைச் சேர்ந்த மோஹினி சவான் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், தான் பணியாற்றும் நிறுவனத்தில் வழக்கமாக ‘ஹைப்ரிட்’ (Hybrid – சில நாட்கள் அலுவலகம், சில நாட்கள் வீடு) முறையே பின்பற்றப்படுவதாகவும், ஆனால் ஆண்டிற்கு இரண்டு வாரங்கள் முழுமையாக வீடிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இரு வாரங்கள் வீடிலிருந்தே வேலை செய்ததில் எனது மூளை முற்றிலும் சோர்ந்துவிட்டது. இரண்டு வாரங்களாக வீட்டை விட்டே வெளியே செல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டது” என அவர் ஆதங்கப்பட்டுள்ளார். வார இறுதி நாட்களில்கூட ஒரே ஒரு நாள் மட்டுமே வெளியே சென்று வந்ததாகவும், தினமும் வேலை, உணவு, உறக்கம் என ஒரே மாதிரியான சுழற்சி மனிதரை சலிக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆண்டு முழுவதும் நிரந்தரமாக வீடிலிருந்தே வேலை பார்ப்பவர்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது, அவர்களுக்கு என் சலூட்!” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அலுவலகத்திற்கு செல்லும்போது நண்பர்களைச் சந்திக்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், உரையாடவும், பயணிக்கவும் வாய்ப்பு கிடைப்பதாகவும், எனவே ஹைப்ரிட் வேலை கலாச்சாரமே மன நலத்திற்கும் வேலைக்கும் சரியான சமநிலையைத் தருகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவரது இந்த கருத்திற்கு பல நெட்டிசன்களும் ஆதரவு தெரிவித்து, “தொடர்ந்து வீட்டிலேயே முடங்கி வேலை செய்வது அனைவருக்கும் செட் ஆகாது, ஹைப்ரிட் முறையே சிறந்தது” என கமெண்ட் செய்து வருகின்றனர்.



