குழந்தைகளுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுக்கும் முன், அது பாதுகாப்பானதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்வது மிகவும் அவசியம். கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமற்ற எண்ணெய் அல்லது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்தால், அது குழந்தைகளின் உடல்நலத்தில் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் இதன் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செங்குன்றம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஸ்ரீத்திகா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3ஆம் தேதி செந்தில்குமார் தனது மகளுடன் பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் பஜார் வீதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு கடையில் வாங்கிய பஜ்ஜியை ஸ்ரீத்திகா சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதுடன், மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து பதறிப்போன செந்தில்குமார், மகளை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீத்திகா உயிரிழந்தார்.
குழந்தைகளுக்கு வெளியில் உணவு வாங்கிக் கொடுக்கும்போது, கடையின் சுகாதார நிலை, உணவு தயாரிக்கப்படும் விதம், பயன்படுத்தப்படும் எண்ணெய் உள்ளிட்டவற்றில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு உணவு சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், வயிற்றுவலி போன்ற அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுவதும் அவசியம்.
Also Read: ஆசையாக கிருஷ்ணர் வேடமணிந்த 5 வயது சிறுவன்.. முத்துமாலையில் இருந்த மணி தொண்டையில் சிக்கி பரிதாப பலி!



