தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான சில நாட்களில் இரண்டு (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு) தொகுதிகளில் வென்றதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான பரபரப்பு அடங்குவதற்குள், திருச்சி கிழக்கு தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும்? மீண்டும் தவெக வெல்லுமா? இல்லை எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பார்களா? என்பது போன்ற பல கேள்விகள் வலம் வந்த நிலையில், அதிமுவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு அடுத்தடுத்து ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தனர்.
இதனால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலோடு, மேலும் ஆறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தவெகவுக்கு மெஜாரிட்டிக்கான எண்ணிக்கை இல்லாத போது, இந்த இடைத்தேர்தலை தங்களுக்கான வாய்ப்பாகவே தவெக பார்த்தது.
ஆனால், இதில் பெரிய அரசியல் ட்விஸ்ட்டாக இந்த 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் (மதுராந்தகம், தாராபுரம் தவிர) தேர்தல் வழக்குகளை மேற்கோள் காட்டி இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் இப்போதைக்கு தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லையோ? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக தேர்தல் வழக்கில் சிக்கிக் கொள்ளாத மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைதேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் வெளியிட்டது. அதன்படி வரும் அக்.6-ம் தேதி இந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிமுகவும், திமுகவும் ஒரே நேரத்தில் விலக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இரு தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த இடைத்தேர்தல் இரு கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த இரண்டு மாதமாக தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சஸ்பென்ஸுக்கு விடை கொடுத்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
அந்தவகையில் இடைத்தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் கோட்டை விட்ட திமுக, இடைத்தேர்தலில் வெற்றிக்காக காய் நகர்த்தி வருகிறது. அதன்படி, முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக இடைத்தேர்தலில் இருந்து திமுக விலகப்போவதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் இன்று காலையில் உதயநிதி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



