பெற்றோரின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மகனின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் தனது தாயின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருமாறு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது.
தாய் மற்றும் மகனுக்கு இடையிலான சொத்துத் தகராறு தொடர்பான வழக்கில், தங்களது பாசத்தின் காரணமாக மகனும் அவனது மனைவியும் வீட்டின் முதல் தளத்தில் வாடகை இன்றி வசிக்க பெற்றோர் அனுமதித்துள்ளனர். ஆனால், நாளடைவில் அந்தச் சொத்தை தங்களின் பெயருக்கு மாற்றக் கோரி மகனும் அவனது மனைவியும் பெற்றோரைத் துன்புறுத்தியதுடன், போலி ஆவணங்களையும் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாளிதழில் பொது அறிவிப்பு வெளியிட்டு மகனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டனர். மேலும், காவல் நிலையத்தில் புகாரளித்து வீட்டை காலி செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றமும், பின்னர் டெல்லி உயர் நீதிமன்றமும் பெற்றோர்தான் சொத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்றும், மகனை வீட்டை விட்டு வெளியேற்றுமாறும் உத்தரவிட்டன.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என். கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மகனின் செயலைக் கடுமையாகக் கண்டித்த நீதிபதிகள், “நீ போய் உன் தாயின் கால்களைத் தொட்டு மன்னிப்புக் கேள். உன் பாவங்களுக்கெல்லாம் அவளிடம் மன்னிப்பு கேள்” என்று அறிவுறுத்தினர்.
தொடர்ந்து மகனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அந்த நபர் 60 நாட்களுக்குள் வீட்டின் முதல் தளத்தைக் காலி செய்ய வேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.



