செங்கோட்டை தாக்குதல் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதி ஜசீர் பிலால் வானி, ராக்கெட் மற்றும் வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது குறித்து YouTube மற்றும் ChatGPT மூலம் தகவல்களைத் தேடியதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராக்கெட் அல்லது வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்த சம்பவம் முதன்முறையாக NIA விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
NIA குற்றப்பத்திரிகையின்படி, ஜசீர் பிலால் வானி, உமர் உன் நபி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். 2024 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அல்ஃபலாஹ் கல்லூரி வளாகத்தில் அவர்களுடன் இரண்டு முதல் மூன்று முறை தங்கியிருந்து, சதித்திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவி வழங்கியுள்ளார்.
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, ஜசீர் பிலால் வானியை உமர் உன் நபிக்கு அறிமுகப்படுத்தியது அடீல் அகமது ராதர். மேலும், வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான சில பொருட்களையும் ஜசீரிடம் அவர் வழங்கியுள்ளார். ராக்கெட் வகை வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வுக்காக உமர் உன் நபி ஜசீருக்கு பணம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, ராக்கெட்டை உருவாக்குவது எப்படி, அதற்குத் தேவையான பொருட்களை எந்த அளவில் கலக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜசீர் பிலால் வானி YouTube மற்றும் ChatGPT-யில் விரிவாகத் தேடியுள்ளார். இதன் மூலம் தாக்குதலுக்கான தொழில்நுட்பத் தயாரிப்பில் அவர் ஈடுபட்டதாக NIA விசாரணை பதிவு செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) உடன் தொடர்புடையவர்கள், 2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்ற ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் NIA குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் காசிகுண்டைச் சேர்ந்த ஜசீர் பிலால் வானியை NIA கடந்த 2025 நவம்பர் 17ஆம் தேதி கைது செய்தது. தாக்குதலுக்கு முன்பு ட்ரோன்களில் மாற்றங்களைச் செய்ததுடன், ராக்கெட் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக NIA தெரிவித்தது.
செங்கோட்டை தாக்குதல் சதித்திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஜசீர் பிலால் வானி, உமர் உன் நபியுடன் இணைந்து தாக்குதலுக்கான திட்டமிடலில் செயல்பட்டதாக NIA விசாரணை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளது.
Also Read: பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!. பிரிக்ஸ் மாநாட்டிற்காக 500 சிசிடிவி கேமராக்கள்; 7,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு!. ஒளிரும் கட்டிடங்கள்!.



