காணாமல் போன இரு மகன்களை மீட்பதற்காக பீகாரைச் சேர்ந்த தம்பதி எடுத்த முடிவு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகன்களைத் தேடும் பணியில் காவல்துறையுடன் இணைந்து முயற்சி மேற்கொண்ட அவர்கள், தாங்களும் பிச்சைக்காரர்களைப் போல வேடமிட்டு பல மாநிலங்களில் சுற்றித் தேடியுள்ளனர். இறுதியில் இரு மகன்களையும் தனித்தனியாக கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் முந்த்ரா பகுதியில் வசித்து வந்த அந்தத் தம்பதியின் 14 வயது மகன் ராகுல், 11 வயது மகன் அர்பித் ஆகியோர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றனர். விளையாடச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடுகள், சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் காவல் நிலையங்களில் தேடுதல் நடத்தினர்.
பல வாரங்கள் கடந்தும் சிறுவர்களைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதற்கிடையில், குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மகன்களைத் தேடும் நடவடிக்கையை அவர்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றனர்.
தங்களது அடையாளத்தை மறைத்து பிச்சைக்காரர்கள் போல மாறிய தம்பதி, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றனர். பேருந்து நிலையங்கள், தெருக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் குழந்தைகளைத் தேடினர். அங்கிருந்த பிச்சைக்காரர்களிடமும் காணாமல் போன தங்களது மகன்கள் குறித்து விசாரித்தனர்.
இந்தத் தேடுதலின் போது ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் ராகுல் இருப்பது தெரியவந்தது. அங்கு பிச்சைக்காரர்கள் குழுவிடம் இருந்த சிறுவனை பெற்றோர் மீட்டனர்.
மூத்த மகன் கிடைத்தபோதும், இளைய மகனைத் தேடும் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை. தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலில் சுமார் 15 நாட்களுக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியில் அர்பித்தையும் கண்டுபிடித்தனர்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த தேடுதலுக்குப் பிறகு இரு மகன்களையும் மீட்ட பெற்றோர், அவர்களை பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினர். குழந்தைகளைத் தேடி மாநிலம் மாநிலமாகச் சென்று, தங்களது அடையாளத்தையே மாற்றிக்கொண்டு பெற்றோர் நடத்திய இந்தப் போராட்டம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Also Read: செங்கோட்டை தாக்குதல்.. ராக்கெட் தயாரிப்பது எப்படி? ChatGPT, YouTube-ல் தேடிய பயங்கரவாதி.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..



