விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னையில் 1,562 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,000 பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதேபோல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பந்தல்கள் தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிய தடையில்லாச் சான்றுகளைப் பெற்றிருக்க வேண்டும் எனவும், எளிதில் தீப்பற்றாத கூரைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் வரும் செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். மேலும் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் காவல்துறை நிர்ணயித்துள்ள இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்படும். முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.



