டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகப் பரவி வரும் செய்திகளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் ‘போலியான’ மற்றும் ‘தவறாக வழிநடத்தும்’ செய்தி என்று கூறியுள்ள அமைச்சகம், இதுபோன்ற தவறான பதிவுகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உண்மை கண்டறியும் குழு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போலி செய்தி எச்சரிக்கை!!! சமூக வலைத்தளங்களில் பரவும் இதுபோன்ற தீங்கிழைக்கும் பதிவுகள் குறித்து நாங்கள் எச்சரிக்கிறோம்!” என்று தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாளிலேயே (செப்டம்பர் 12) ‘புதுடெல்லி பிரகடனம் 2026’ வெற்றிகரமாக ஏற்கப்பட்டது. இதில் உலகளாவிய சுகாதார முன்முயற்சிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மருத்துவ சேவையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ஆரம்பத்தில் சில நிபந்தனைகளை விதித்ததால், பிரகடனம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடைசி கட்டம் வரை தீவிரமாக நீடித்தது. இருப்பினும், முதல் நாளிலேயே பிரகடனம் ஏற்கப்பட்டது இந்தியாவின் குறிப்பிடத்தக்க ராஜதந்திர வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில், இந்தப் பிரகடனம் ஏற்கப்பட்டதைப் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அறிவித்தார். “மேற்கு ஆசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறோம்; நிலைமையை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்த்து, அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்குக் கண்டனம்: உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு முரணான மற்றும் வர்த்தகத்தை சிதைக்கும் வகையிலான ஒருதலைப்பட்சமான வரிகள் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் கவலை தெரிவித்தன. சர்வதேச சட்டங்களுக்கு முரணான நிர்ப்பந்தங்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அமைதி மற்றும் ராஜதந்திரம்: மோதல்களுக்கான மூலக்காரணங்களை கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பிரகடனம் வலியுறுத்தியது. சர்வதேசப் பிரச்சனைகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்ப்பதற்கான தங்களது அர்ப்பணிப்பையும் பிரிக்ஸ் நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின.
பன்முகத்தன்மை வாய்ந்த அணுகுமுறை: உலகளாவிய முக்கியப் பிரச்சனைகளில் பல்வேறு நாடுகளின் கண்ணோட்டங்களைக் கருத்தில் கொண்டு, பன்முகத்தன்மை வாய்ந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பு மற்றும் உரையாடலின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



