வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்கள், மன அழுத்தம் மற்றும் இக்கட்டான ஆபத்துகள் சூழும்போது மனித மனம் அடைக்கலமாகத் தேடுவது இறைவனின் திருவடிகளைத்தான். அதுவரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட, வாழ்வின் இக்கட்டான தருணங்களில் இறைவனின் அருள் தேவையாகிறது. அவ்வாறு சோதனைகள் நிறைந்த காலகட்டத்தில், உலகைக் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைச் சரணடைவது மிக விரைவான நற்பலன்களைத் தரும்.
முதலை காலைப் பற்றிய வேளையில், மரண பயத்தில் “ஆதிமூலமே” என கதறிய கஜேந்திரன் என்ற யானையைக் காக்க கருட வாகனத்தில் பறந்து வந்து மோட்சம் அளித்தவர் எம்பெருமான். அதேபோல, “தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்” என்று குழந்தை பிரகலாதன் உறுதியோடு சொன்ன வார்த்தையை மெய்ப்பிக்க, தூணைப் பிளந்துகொண்டு நரசிம்ம அவதாரம் எடுத்தவர் ஸ்ரீஹரி. உண்மை பக்தியோடு எந்த ஒரு ஜீவன் அழைத்தாலும் ஓடோடி வந்து அபயம் அளிப்பவர் பெருமாள் என்பதற்கு இவையே மிகச்சிறந்த சான்றுகளாகும்.
பெருமாளின் ஆயிரம் திருநாமங்களைப் போற்றும் ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ பாராயணம் செய்ய முடியாதவர்கள், மிக முக்கிய சக்தி வாய்ந்த 16 திருநாமங்களைக் கூறி வழிபடலாம். இதற்கு ‘விஷ்ணு ஷோடச நாமம்’ என்று பெயர். இன்றைய அவசர காலகட்டத்தில் இதற்காகத் தனியாக நேரம் ஒதுக்கிச் சொல்ல இயலாதவர்கள் கூட, அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின்போதும் அதற்குரிய குறிப்பிட்ட திருநாமத்தை மனதார உச்சரித்தாலே பரிபூரண பலனைப் பெற முடியும்.
16 திருநாமங்கள் :
மருந்து உட்கொள்ளும் முன்: விஷ்ணு
உணவு சாப்பிடும் போது: ஜனார்த்தனா
இரவில் உறங்கச் செல்வதற்கு முன்: பத்மநாபா
திருமணம் நடைபெறும் தருணத்தில்: ப்ரஜாபதி
களத்தில் அல்லது போட்டிகளில் இருக்கும் போது: சக்ரதாரா
பயணங்கள் மேற்கொள்ளும் போது: த்ரிவிக்ரமா
மரணப்படுக்கையில் இருக்கும் போது: நாராயணா
மனதிற்குப் பிரியமானவர்களை சந்திக்கும் போது: ஸ்ரீதரா
கெட்ட கனவுகள் தோன்றி அச்சுறுத்தும் போது: கோவிந்தா
எதிர்பாராத துன்பம் அல்லது ஆபத்து நேரும் போது: மதுசூதனா
அச்சம் நிறைந்த காடுகளில் பயணிக்கும் போது: நரசிம்மா
தீ விபத்துகளில் சிக்கும் போது: ஜலஷயனா
வெள்ளம் மற்றும் நீர் நிலைகளில் சிக்கும் போது: வராஹா
மலைகள் ஏறும் போது: ரகுநந்தா
சுப காரியங்களுக்காக வீட்டிலிருந்து புறப்படும் போது: வாமனா
புதிய அல்லது அன்றாட எந்தவொரு செயலையும் தொடங்கும் போது: மாதவா
ஒவ்வொரு செயலை செய்யும்போதும் அதற்குரிய இந்த எளிய திருநாமங்களை உளமார உச்சரித்து வந்தால், சகல தோஷங்களும் காரிய தடைகளும் நீங்கி, ஸ்ரீமந் நாராயணனின் பேரருள் எப்போதும் நம்மைப் பாதுகாக்கும் என்பது உறுதி.



