தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றால் அடுத்த கணமே தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான முத்தரசன், சட்டமன்ற பேரவையில் மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும் போது, அதற்கு உரிய விளக்கங்களை அளிக்காமல் முதல்வரும் அவரது அமைச்சர்களும் பிரச்சனைகளை திட்டமிட்டு திசை திருப்பி வருவதாக கூறினார்.
ஒரு ஜனநாயக அரசில் சட்டமன்ற விவாதங்களுக்குத் தகுந்த தீர்வு காண வேண்டுமே தவிர, கவனத்தைத் திசைதிருப்புவதால் யாருக்கும் எந்தப் பயனும் கிட்டாது என அவர் சாடினார். மேலும், தவெக அரசுக்கு தேர்தல் எண்களை நினைவூட்டிய முத்தரசன், தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற பலத்தால்தான் இந்த ஆட்சி தப்பிப் பிழைத்து வருகிறது என்பதை ஆளும்கட்சி மறந்துவிடக் கூடாது என எச்சரித்தார்.
இடதுசாரிகளின் பொறுமையும் தாராள மனப்பான்மையும்தான் இந்த அரசைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை அந்த ஆதரவு வாபஸ் பெறப்பட்டால் அடுத்த கணமே இந்த அமைச்சரவை கவிழ்ந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக தலைவர்களின் சர்ச்சைப் பேச்சுகளாலும், மீனவர் விவகாரங்களில் அரசின் ஒருதலைப்பட்சமான நிலைப்பாடுகளாலும் இடதுசாரிகள் புகைந்து கொண்டிருந்த நிலையில், முத்தரசனின் இந்த “ஆட்சி கவிழும்” என்ற அதிரடிப் பேட்டி தவெகவை நிலைகுலைய வைத்துள்ளது.
Read More : ஒரே ஊரில் பெஞ்ச் தேய்க்கும் அரசு ஊழியர்களுக்கு செக்..! சாட்டையை சுழற்றும் தவெக அரசு..!



