நேற்று ஜிம்மில் வழக்கத்தைவிட அதிகமாக உடற்பயிற்சி செய்திருக்கலாம். அதிக எடையை தூக்கி, வேகமாக ஓடி, கடினமான பயிற்சிகளை முடித்த பிறகு நல்ல workout செய்த திருப்தி கிடைக்கலாம். ஆனால் அடுத்த நாள் படுக்கையில் இருந்து எழுவதற்கே உடல் ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டால், பயிற்சியின் அளவை சற்று கவனிக்க வேண்டிய நேரமாக இருக்கலாம்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், வேகமாக fitness பெறவும் high-intensity workoutகளை பலரும் தேர்வு செய்து வருகின்றனர். கடினமாக உடற்பயிற்சி செய்தால் அதற்கேற்ப உடல் திறனும் அதிகரிக்கும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் உடலின் சக்திக்கு மீறி தொடர்ந்து பயிற்சி செய்வது சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
HT Lifestyle-க்கு அளித்த பேட்டியில் MultiFit Wellness நிறுவனத்தின் இயக்குநர் தீப்தி சர்மா, அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியின் சாத்தியமான பாதிப்புகள் குறித்தும், workout-ன் தீவிரத்தை அதிகரிப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கியுள்ளார்.
High-intensity exercise சரியான முறையில் மேற்கொள்ளப்படும்போது இதய ஆரோக்கியம், உடல் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்திறனை மேம்படுத்த உதவும். ஆனால் ஒவ்வொரு workout-ம் அதிகபட்ச தீவிரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பிரச்சினையை ஏற்படுத்தலாம். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யாத ஒருவர் திடீரென வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினால், உடலுக்கு அதற்கேற்ப தயாராக போதுமான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.
தசைகள், மூட்டுகள், நரம்பு மண்டலம் மற்றும் இதய-ரத்த நாள அமைப்பு என உடலின் பல்வேறு பகுதிகளும் புதிய உடற்பயிற்சி சுமைக்கு படிப்படியாகத்தான் பழகும். உடலுக்கு தேவையான recovery நேரம் கிடைக்காமல் தொடர்ந்து அதிகப்படியான பயிற்சி மேற்கொள்ளும்போது, நீடித்த உடல் வலி, வழக்கத்திற்கு மாறான சோர்வு, workout performance குறைதல், தூக்கத்தில் பாதிப்பு மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படும் காயங்கள் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.
சிலர் அதிகமாக வியர்ப்பது, அதிக கலோரிகளை எரிப்பது அல்லது அதிக எடையை தூக்குவது போன்றவற்றையே வெற்றிகரமான workout-க்கான அடையாளமாக நினைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு பயிற்சியிலும் உடலை முழுமையாக சோர்வடையச் செய்வதே fitness-ன் நோக்கம் அல்ல. உடற்பயிற்சி உடலுக்கு சவாலாக இருக்க வேண்டும்; உடல் முற்றிலும் சோர்ந்து போகும் அளவுக்கு இருக்கக்கூடாது என தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
Workout-ல் recovery என்பதும் பயிற்சியின் ஒரு முக்கிய பகுதிதான். போதுமான தூக்கம், சரியான உணவு, தண்ணீர் அருந்துதல், mobility பயிற்சிகள் மற்றும் ஓய்வு ஆகியவை உடல் தன்னை சீரமைத்துக்கொண்டு மீண்டும் வலிமை பெற உதவுகின்றன. எனவே எப்போது வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வதைப் போலவே, எப்போது சற்று குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம்.
குறிப்பாக புதிதாக high-intensity training தொடங்குபவர்கள், மற்றவர்கள் செய்யும் அளவைப் பார்த்து அதே வேகத்தில் பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. முதல் வாரத்திலேயே அதிக தீவிரத்தை நிரூபிக்க முயற்சிப்பதை தவிர்த்து, தற்போதைய உடல் திறனுக்கு ஏற்ற நிலையில் இருந்து தொடங்க வேண்டும். பின்னர் படிப்படியாக பயிற்சியின் அளவையும் தீவிரத்தையும் அதிகரிக்கலாம்.
Workout செய்யும்போது ஏற்படும் இயல்பான சிரமத்தையும் வலியையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்வதும் முக்கியம். உடற்பயிற்சியின்போது மூச்சு அதிகமாக வாங்குவது, சோர்வாக உணர்வது அல்லது உடல் சவாலை எதிர்கொள்வது இயல்பாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து நீடிக்கும் வலி, தலைச்சுற்றல், வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல் அல்லது அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடற்பயிற்சியை நிறுத்தி கவனம் செலுத்த வேண்டும்.
உடலை வலுப்படுத்துவதற்கு கடினமான workout மட்டும் போதாது. சரியான பயிற்சி, படிப்படியான முன்னேற்றம் மற்றும் போதுமான recovery ஆகிய மூன்றும் இணைந்தால்தான் நீடித்த உடல்தகுதியை உருவாக்க முடியும்.
Also Read: ஒரே ஊரில் பெஞ்ச் தேய்க்கும் அரசு ஊழியர்களுக்கு செக்..! சாட்டையை சுழற்றும் தவெக அரசு..!



