தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் கவனம் பெறும் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 228 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 79 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 17,277 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி சராசரியாக 200-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டெங்கு பாதித்தவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது சுகாதாரத் துறைக்கு சவாலாகியுள்ளது.
டெங்குவை கட்டுப்படுத்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அதை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியையும் தடுக்க வேண்டியது முக்கியம். இந்த வகை கொசுக்கள் கழிவுநீரில் மட்டுமின்றி, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் சுத்தமான தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யக்கூடும்.
குறிப்பாக மழைக்குப் பிறகு வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள், தொட்டிகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்குகிறதா என்பதை மக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். சிறிய அளவில் தேங்கியிருக்கும் தண்ணீரைக் கூட அகற்றுவது கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றுவதிலும் சுகாதாரத்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Also Read: ஒன்றரை வயது குழந்தையின் அழுகை.. ஆட்டோ டிரைவர் கவனித்த அந்த ஒரு விஷயம்; சிக்கிய கடத்தல் கும்பல்!



