தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு களத்தில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், இதனை தூண்டிவிடும் எதிர்க்கட்சியினர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க தவெக தேர்தல் பொறுப்பாளர்களான அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள் இடையே தீவிரமான 5 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்று, பின்னர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர், தற்போது மீண்டும் அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் வாக்கு சேகரிக்க கிராமங்களுக்கும் வார்டுகளுக்கும் செல்லும்போது, ஒருசில தரப்பினர் திரண்டு நின்று கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் தேவையற்ற சலசலப்பும் இடையூறுகளும் ஏற்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தாமாக முன்வந்து இந்த எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்றும், பொதுமக்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களே திட்டமிட்டு பின்னணியில் இருந்து இதனை இயக்குகின்றனர் என்றும் தவெக வேட்பாளர்கள் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து தவெக தேர்தல் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவ்விரு தொகுதிகளிலும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் நேரில் சென்று அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள சூழலில், பிரச்சாரத்தை சீர்குலைக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் இத்தகைய மறைமுக நடவடிக்கைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திடம் நேரில் முறையிட தவெக அமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More : சிறுமியை துன்புறுத்திய பீகார் கும்பல்!. முக்கிய குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்!. பரபரப்பு பின்னணி!



