மரண பயம் காட்டிய ஜப்பான்!. வரலாற்று தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா!. 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

india vs japan 30kb

ஜப்பான் அணியின் அபார பந்துவீச்சால் கடும் நெருக்கடிக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் நூலிழையில் தப்பித்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


காண்டோவில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, மழை மற்றும் ஈரமான மைதானம் காரணமாக தாமதமானது. இறுதியில், மைதானத்தை பரிசோதித்த நடுவர்கள் போட்டியை தலா 5 ஓவர்களாக குறைத்து நடத்த தீர்மானித்தனர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், எதிர்பாராத விதமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 5 ஓவர் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த முதல் முழுநேர அணி கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தாலும், அந்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை.

பிட்ச் பந்துவீச்சுக்கு கடுமையாக ஒத்துழைத்ததால், இந்திய பேட்டர்கள் ரன் அடிக்க திணறினர். சஞ்சு சாம்சன் எதிர்கொண்ட முதல் பந்தே விசித்திரமாக திரும்பிய நிலையிலும், தொடர்ந்து விளையாடி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா சந்தித்த முதல் பந்திலேயே பெரிய ஷாட் அடிக்க முயன்று ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட்டானார்.

அடுத்தடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் 3 ரன்களில் வெளியேற, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக ஆடி 16 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜப்பான் தரப்பில் சார்லி ஹாரா-ஹின்சே, ஸ்ரேயாஸ் மற்றும் அபிஷேக் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ஜப்பான் அணி, இந்திய அணிக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்தது. முதல் ஓவரை வீசிய அக்ஸர் படேல் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இரண்டாவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர், இப்ராஹிம் தகாஹாஷியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

மூன்றாவது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய் 10 ரன்களை விட்டுக்கொடுத்ததால், போட்டி ஜப்பான் பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவர்களில் ஜப்பானுக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் நான்காவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர், ஜப்பான் கேப்டன் கெண்டல் கடோவாக்கி-ஃப்ளெமிங்கின் (12 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்திப் போட்டியை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவந்தார்.

கடைசி ஓவரில் ஜப்பான் வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அக்ஸர் படேல் பந்துவீச வந்தார். முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. அடுத்தடுத்த பந்துகளில் நடுவர் ‘வைடு’ வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டாவது வைடு முடிவில் அக்ஸர் படேல் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நடுவரிடம் முறையிட்டனர். நடுவர்கள் தங்களுக்குள் ஆலோசித்து, அந்த ‘வைடு’ முடிவை வாபஸ் பெற்றனர்.

கடைசி 3 பந்துகளில் ஜப்பான் அணியால் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று பெரும் அவமானத்திலிருந்து தப்பியதுடன், சுசுகி கோப்பையையும் தட்டிச் சென்றது.

1newsnationuser5

Next Post

72 ஆண்டுகால பயணம்!. எப்படி தொடங்கியது?. முதல் விருது பெற்றவர்கள் யார்?. தேசிய திரைப்பட விருதுகளின் சுவாரசிய வரலாறு!.

Tue Sep 22 , 2026
இந்திய சினிமாவின் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகளின் 72-வது விழா, குஜராத் மாநிலம் கெவாடியா (ஏக்தா நகர்) பகுதியில் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். டெல்லிக்கு வெளியே தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். 72-வது ஆண்டை எட்டியுள்ள இந்த தேசிய திரைப்பட விருதுகளின் பின்னணி, நோக்கம் மற்றும் கடந்து […]
national film awards history 30kb

You May Like