மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதுடன், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவையும் மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தேசிய அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.
டெல்லி மேலிடத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு 2 அமைச்சர் பதவிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தரப்பிற்கு 2 அமைச்சர் பதவிகளையும் ஒதுக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும், இந்த விவகாரம் தற்போது வரை ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நிலையிலேயே நீடிப்பதாகவும், திமுக தரப்பில் இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ முடிவும் எட்டப்படவில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை சரத் பவார் அணியும் திமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், மக்களவையில் என்டிஏ கூட்டணியின் மொத்த பலம் 355 ஆக கணிசமாக உயரும். இதன் மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு தனிப்பெரும்பான்மைக்கு (Two-Thirds Majority – 360 இடங்கள்) தேவையான எஞ்சிய 5 எம்.பி.க்களின் ஆதரவைச் சுயேச்சைகள் மற்றும் இதர சிறிய கட்சிகளின் மூலம் திரட்டிவிட பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்த பலம் கைகூடும் பட்சத்தில், மக்களவை மட்டுமின்றி மாநிலங்களவையிலும் என்டிஏ கூட்டணி அபார பலத்தைப் பெறும். இதன் வாயிலாக தொகுதி மறுவரையறை (Delimitation) போன்ற முக்கிய மசோதாக்கள், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றிக் கொள்ள வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், கூட்டணி குறித்த இறுதி முடிவு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : மக்களை தூங்கவிடாத டவுசர் கேங்..!! நள்ளிரவில் திக் திக்..!! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!



