தத்து எடுத்த குழந்தையை தொடர்ந்து வளர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், அந்தக் குழந்தையை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க சட்டத்தில் அனுமதி உள்ளதா? இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலைத் தேடும் வகையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2018ஆம் ஆண்டு 6 வயது சிறுவனை சட்டப்பூர்வ நடைமுறையில் தத்து எடுத்த ஒரு தம்பதியினர், சில ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத குடும்பச் சூழலை எதிர்கொண்டுள்ளனர். கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சிறுவனை தனியாகப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறி வளர்ப்புத் தாய் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
சிறுவனின் நடத்தை தொடர்பாகவும் மனுவில் பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவன் அடிக்கடி ஆக்கிரோஷமாக நடந்து கொள்வதாகவும், பள்ளியில் மற்ற மாணவர்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்ட சம்பவங்கள் காரணமாக சில பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தாயின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலும் நிலைமை சிக்கலாக இருப்பதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. வீட்டில் வசிக்கும் மூன்று பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுவனை தங்களால் தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுவனுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், அவனை அரசு அமைப்பிடம் அல்லது மத்திய தத்து எடுப்பு வள ஆணையமான CARA-விடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, தத்து எடுப்புக்குப் பிறகு குழந்தையை வளர்க்க முடியாத சூழல் உருவானால் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடைமுறை குறித்து கூடுதல் தெளிவு தேவைப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தையை தத்து எடுப்பதற்கான நடைமுறைகள் சட்டத்தில் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், தத்து எடுத்த பிறகு குடும்பத்தால் குழந்தையைத் தொடர்ந்து பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளனவா என்ற கேள்வியும் இந்த வழக்கில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு, குழந்தை நலக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் டெல்லி உயர் நீதிமன்றம் பதில் கோரியுள்ளது. குழந்தையின் பாதுகாப்பு, நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் சட்டரீதியான தீர்வு காணப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தத்து எடுப்புக்குப் பிறகு குழந்தைக்கும் வளர்ப்புப் பெற்றோருக்கும் இடையே உருவாகும் உறவு, குழந்தையின் நடத்தை அல்லது உளவியல் சார்ந்த சிக்கல்கள், பெற்றோரின் குடும்பச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்ற பெரிய விவாதத்தையும் இந்த வழக்கு எழுப்பியுள்ளது.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதில்களைப் பெற்ற பிறகு, குழந்தையின் நலனை முதன்மையாகக் கொண்டு நீதிமன்றம் அடுத்தகட்ட முடிவை எடுக்க உள்ளது.
Also Read: ஜெம் வீரமணி வழக்கில் ‘சார்’ யார்? அண்ணா பல்கலைக்கழக வழக்குடன் தொடர்பா? வெளியான புதிய தகவல்…



