தமிழகத்தின் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், இந்திய விளையாட்டு வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி. உஷா 42 ஆண்டுகளுக்கு முன்பு படைத்த தேசிய சாதனையை தற்போது வித்யா முறியடித்துள்ளார்.
ஜப்பானின் ஐச்சி மற்றும் நகோயா மாகாணங்களில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் வித்யா களமிறங்கினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்த அவர், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் மூலம் 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா பதிவு செய்திருந்த 55.42 வினாடிகள் என்ற தேசிய சாதனையை வித்யா கடந்துள்ளார். இதற்கு முன்பே 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுத் தகுதிச்சுற்றில் 55.42 வினாடிகளில் பந்தயத்தை முடித்து உஷாவின் சாதனையை அவர் சமன் செய்திருந்தார்.
தற்போது 55 வினாடிகளுக்குள் 400 மீட்டர் தடை ஓட்டத்தை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய பெருமையையும் வித்யா பெற்றுள்ளார்.
கோவையில் பிறந்த வித்யா ராம்ராஜ், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தடகளத்தில் அவரது குடும்பத்துக்கும் தனி அடையாளம் உள்ளது. வித்யாவின் இரட்டைச் சகோதரி நித்யா ராம்ராஜும் தடகள வீராங்கனையாக உள்ளார். 100 மீட்டர் தடை ஓட்டத்தில் போட்டியிட்டு வரும் நித்யாவும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்.
வித்யாவின் பங்களிப்பு தனிநபர் போட்டியுடன் முடிவதில்லை. இந்தியாவின் 4×400 மீட்டர் மகளிர் மற்றும் கலப்பு ரிலே அணிகளிலும் அவர் இடம்பெற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள அவர், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மற்றொரு பதக்கத்தைச் சேர்த்துள்ளார்.
தனிநபர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்ற வித்யா, கலப்பு 4×400 மீட்டர் ரிலே போட்டியிலும் இந்திய அணியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய ரிலே அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
ஒரே போட்டியில் பதக்கத்தையும், நீண்ட காலமாக நீடித்த தேசிய சாதனையையும் கைப்பற்றியிருப்பதன் மூலம் இந்திய தடகளத்தில் வித்யா ராம்ராஜின் சாதனை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
Also Read: 13 வயது சிறுமிக்கு சிப்ஸ், ஆப்பிள் ஆசை காட்டி.. லாரி ஓட்டுநர் செய்த கொடூரம்!



