நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டால்டன் (76). பெட்ரோல் பங்க் நடத்தி வந்த இவருக்கு நிக்கோலஸ் ராஜரத்தினம் (78) உள்பட 3 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் நால்வருமே குவைத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்று, சொந்த ஊரான மணிப்புரத்தில் ஒரே வளாகத்தில் தனித்தனி வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்புக்கு அருகே மணிப்புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவரது குடும்பக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தின் அருகே டால்டன் குடும்பத்தினர் காரை நிறுத்துவது தொடர்பாக, சென்னை அம்பத்தூரில் வெல்டராகப் பணியாற்றி வந்த செந்தில்குமாருக்கும் அவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த செந்தில்குமாருக்கும், டால்டனின் மகன் நரேனுக்கும் இடையே இன்று காலை கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக மீண்டும் கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதை கண்ட நரேனின் பெரியப்பா நிக்கோலஸ் ராஜரத்தினம், இருவரையும் சமாதானப்படுத்தி தகராறை விலக்கி விடுவதற்காக ஓடி வந்துள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை எடுத்து நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடிவந்த தம்பி டால்டனையும் செந்தில்குமார் வெறித்தனமாகக் கத்தியால் குத்திக் கிழித்தார். தந்தையையும் பெரியப்பாவையும் காப்பாற்ற முயன்ற நரேனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கொலையாளி செந்தில்குமாரின் கையிலும் கத்திக் காயம் ஏற்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நெல்லை டவுன் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே டால்டன் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அண்ணன் நிக்கோலஸ் ராஜரத்தினமும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த நரேன் மற்றும் கொலையாளி செந்தில்குமார் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர காவல் ஆணையர் சேகர் சஞ்சய் தேஷ்முக், துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வெறும் கார் பார்க்கிங் தகராறு காரணமா அல்லது நிலம், கோவில் விவகாரம் உள்ளிட்ட வேறு ஏதேனும் பூர்விகப் பகை இதன் பின்னணியில் உள்ளதா என்ற கோணத்தில் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வளாகத்தில் வசித்து வந்த முதிய சகோதரர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நிலைகுலைய செய்துள்ளது.



