டிராக்டர் டிராலிக்குள் ஆம்புலன்ஸின் முன்பகுதி சிக்கிக்கொண்ட நிலையில், உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் பரபரப்பு ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி அருகே இன்று காலை நடந்த இந்த விபத்தில் பெண் செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ், முன்னால் சென்றுகொண்டிருந்த டிராக்டர் டிராலியின் மீது திடீரென மோதியது. மோதல் மிகவும் வலுவாக இருந்ததால் ஆம்புலன்ஸின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி டிராலிக்குள் சிக்கியது.
வாகனத்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக தொடங்கின. இதில் பெண் செவிலியர் ஷப்னம் கான் பலத்த காயங்களுடன் சிக்கியிருந்தார். அவரை வெளியே கொண்டுவர மீட்புக் குழுவினர் நீண்ட நேரம் முயன்றனர். ஆனால் மீட்கப்பட்டபோது அவர் உயிரிழந்திருந்தார்.
விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் தம்தரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆம்புலன்ஸ் ஏற்கனவே ஒரு நோயாளியை ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது. ஜக்தல்பூர் மகாராணி மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்த நோயாளியை ராய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நோயாளியின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துக்கொண்டு மீண்டும் புறப்பட்டபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் 108 வர்தான் பரமார்த் ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த கிலாவன் சாஹு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் முடிந்த பிறகு செவிலியர் ஷப்னம் கானின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தம்தரி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்புலன்ஸ் டிராக்டர் டிராலி மீது மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: “ரூ.1,499க்கு 4G போன்.. 6 மாதம் ரீசார்ஜ் இலவசம்!” ஜியோவின் புதிய சலுகை…



