மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான தொழில்நுட்பம் செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் தொழில்நுட்பத்தை விட மிகவும் சிக்கலானது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.
திருச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ போன்ற வானிலை நிகழ்வுகள் மழைப்பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த முறை எல் நினோவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மழைப்பொழிவு குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலைமை சீரடைந்து நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
வளிமண்டலத்தின் பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நீண்ட கால காலநிலை மாற்றங்களைத் துல்லியமாக கணிப்பதில் சவால்கள் இருந்தாலும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட மாடல்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் கணிப்புகளை மேலும் துல்லியமாக மேற்கொண்டு வருகின்றனர் .
ககன்யான் திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே நோக்கம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான தொழில்நுட்பம் செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் தொழில்நுட்பத்தைவிட மிகவும் சிக்கலானது. வெப்பநிலை, ஏரோடைனமிக்ஸ், கட்டுப்பாட்டு அமைப்புகள், பாராசூட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கி சோதித்து வருவதாகவும், ககன்யான் திட்டத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முன்னோடி சோதனைப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தால், ககன்யான் திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகள் வேகமெடுத்து, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். விண்வெளி ஆராய்ச்சி என்பது ராக்கெட் அல்லது செயற்கைக்கோள் உருவாக்கம் மட்டுமல்ல , அவற்றின் பயன்பாடுகள் பொதுமக்கள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மிகப்பெரிய பயன்களை வழங்குகின்றன .
எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் விண்வெளித் துறையின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்பதால், இளைஞர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் தற்போதே ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். அவர்களின் ஆராய்ச்சிப் பங்களிப்பு இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை வேகப்படுத்தும் என்றார்.
Read More : கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி! தின்னர் ஊற்றி தீவைத்த கணவன்! தருமபுரியில் குலைநடுங்க வைத்த சம்பவம்!



