தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பிளக்ஸ் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில், விவசாய தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் தாலுகா, சத்தியமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி (50). விவசாயக் கூலித் தொழிலாளியான இவரின் மகன் சேதுபதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் பிரகாஷ் (28) என்பவருக்கும் இடையே, அப்பகுதியில் நடைபெற உள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாய்த்தகராறாகத் தொடங்கிய இந்தப் பிரச்சினை, பின்னர் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான விரோதமாக மாறியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஆத்திரமடைந்த பிரகாஷ், அவரது சகோதரர் ராஜ்குமார் (30) மற்றும் தந்தை மதியழகன் (58) ஆகிய மூவரும் தளபதியின் வீட்டிற்குச் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றிய நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தளபதியின் நெஞ்சுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த தளபதியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக பாபநாசம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கபிஸ்தலம் காவல்துறையினர், தளபதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மோதலில் காயமடைந்த பிரகாஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள ராஜ்குமார் மற்றும் மதியழகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : ரூ.100 கோடி புகார் வழக்கு.. அன்பில் மகேஷுக்கு சிசிபி அனுப்பிய சம்மன்!



