சமையலறை பட்ஜெட்டை பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது காய்கறிகளின் விலை. சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கிலோ ரூ.60 வரை சென்றுள்ளது. இதேபோல் பெரிய வெங்காயமும் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதால், அன்றாட காய்கறி வாங்கும் குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து கணிசமாக சரிந்துள்ளது. தினசரி சுமார் 55 லாரிகளில் வந்த தக்காளி, தற்போது 35 லாரிகளாக குறைந்துள்ளது. சந்தைக்கு வரும் அளவு குறைந்த நிலையில், தேவையை சமாளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த மாற்றத்துக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிலவும் வறட்சி முக்கிய காரணமாக உள்ளது. வறட்சியால் அங்கு தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் சென்னை காய்கறி சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
வரத்து நிலைமை உடனடியாக மேம்படாவிட்டால் தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கணித்துள்ளனர். ஏற்கனவே பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ள நிலையில், முக்கிய சமையல் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ரூ.50,000 முதலீடு.. இரட்டிப்பு லாபம் என ஆசை காட்டி பல கோடி ரூபாய் மோசடி!



