குறுகிய காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற ஆசையை முன்வைத்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடத்தப்பட்டதாக கூறப்படும் கிரிப்டோ முதலீட்டு மோசடி தற்போது பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் பணத்தை இழந்த நிலையில், இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
FQL Exchange, VG Investment உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் இந்த மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் இரண்டு மாதங்களுக்குள் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து பொதுமக்களிடம் பணம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. முதலீடு செய்தவர்களின் கணக்குகளில் USDT எனப்படும் டிஜிட்டல் கரன்சி வரவு வைக்கப்பட்டிருப்பது போன்ற விவரங்களும் காட்டப்பட்டுள்ளன.
ஆனால், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்பப் பெற முயன்றபோது சிக்கல் ஏற்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்பட்ட தொகையை எடுக்க முடியாத நிலை உருவானதுடன், சம்பந்தப்பட்ட செயலிகளும் பின்னர் செயல்படாமல் போனதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலரும் இந்தத் திட்டத்தில் பணம் செலுத்தியுள்ளனர். சிலரது பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதில் டிஜிட்டல் கரன்சி இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மோசடி தொடர்பாக பல்வேறு நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகள் உட்பட ஏஜெண்டுகளாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த முதலீட்டு திட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் வரை சிக்கியிருக்கலாம் என்றும், மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.100 கோடியை தாண்டியிருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கிடைத்த புகார்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் முதலீடு செய்த தொகை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். தற்போது இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி வலையமைப்பில் மேலும் யார் யார் தொடர்பில் இருந்தனர், பணம் எந்தெந்த வழிகளில் பரிமாறப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Also Read: பிரசவ அறையில் மருத்துவர் இல்லை.. தாய், குழந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு!



