கோயம்பேட்டில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், போலீசாரிடம் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சாமியார் வேடத்தில் திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பூவரசி (28), கணவரைப் பிரிந்து தனது 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். அருகில் உள்ள பள்ளியில் தருண் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், பூவரசிக்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் பூவரசியும் தமிழ்ச்செல்வனும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சென்றபோது, அங்கிருந்த சில பெண்களுடன் தமிழ்ச்செல்வனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்கள் தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழ்ச்செல்வன் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பூவரசி அவருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பவில்லை என்ற கோபமும் அவருக்கு இருந்ததாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிய தமிழ்ச்செல்வன், அங்கு இருந்த சிறுவன் தருணை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவத்துக்குப் பிறகு பூவரசிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சிறுவன் கொலை தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை தேடி வந்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
போலீசாரின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காக தோற்றத்தை மாற்றிய தமிழ்ச்செல்வன், தலையை மொட்டை அடித்துக்கொண்டு சாமியார் போன்று வேடமிட்டு அப்பகுதியில் சுற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, சிறுவன் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: வேலையை விட்ட பிறகும் EPF பணம் இருக்கும்.. வட்டி விஷயத்தில் மட்டும் இதை கவனிங்க!



