இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்றழைக்கப்படும் பெங்களூரு நகரம், மென்பொருள் வல்லுநர்களுக்கும் அதிக சம்பளம் தரும் ஐடி நிறுவனங்களுக்கும் பெயர்பெற்றது. ஆனால், அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பணிபுரியும் இளைஞர்களுக்குப் பெரும் கவலையாக மாறியுள்ளது.
இந்நிலையில், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ‘ப்ராடக்ட் மேனேஜராக’ பணிபுரியும் சிவாங்க் கோயல் (Shivank Goel) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மாதம் 1 லட்ச ரூபாய்க்கும் குறைவாகச் சம்பளம் வாங்குபவர்கள் தயவுசெய்து பெங்களூரு பக்கம் வர வேண்டாம் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். இங்கு பொழுதுபோக்கு என்பதே உணவகங்கள், கேஃபேக்கள் மற்றும் பணத்தைச் செலவழித்துச் செல்லும் நிகழ்வுகளோடுதான் பிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நகரம் அந்த அளவுக்கு வர்த்தகமயமாகிவிட்டதால், ஆண்டிற்கு 12 லட்சம் ரூபாய் வாங்கும் சம்பளம் கூட வெறும் 4 லட்சம் ரூபாய்க்குச் சமமாகத்தான் தோன்றும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் முன்பணமாக ரூ. 2 லட்சம் கேட்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. 1BHK வீட்டிற்கே மாத வாடகை ரூ. 25,000 முதல் ரூ. 40,000 வரை வசூலிக்கப்படுகிறது.
வெறும் 5 கிலோமீட்டர் தூரம் வரை டாக்சியில் பயணிக்கவே ரூ. 600 வரை செலவாகிறது. அதுமட்டுமின்றி, கடுமையான போக்குவரத்து நெரிசலால் 5 கி.மீ தூரத்தைக் கடக்கவே 1 மணி நேரம் வரை வீணாகிறது.
‘கப்பன்பார்க்’ போன்ற பொது இடங்களுக்குச் சென்று வர வேண்டுமென்றாலும் கூட, ஒரு நாள் முன்னதாகத் திட்டமிட்டு சுமார் 4 மணிநேரப் பயணத்திற்குத் தயாராக வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை தவிர, உணவு ஆர்டர் செய்வது, பராமரிப்புக் கட்டணம் , பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்கான சந்தாக்கள் ஆகியவை ஒரு நபரின் மாதச் சம்பளத்தை அப்படியே விழுங்கிவிடுகின்றன.
சிவாங்க் கோயலின் இந்த வீடியோவிற்கு இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. பெங்களூருவில் வாழ உண்மையிலேயே அதிகச் செலவாகிறது என்றும், 10 நாட்கள் வந்து தங்கினாலே ஒரு மாதச் சம்பளம் காலியாகிவிடும் என்றும் பலர் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் சிலர் இதை மறுத்து, குறைந்த செலவில் செயல்படும் உணவகங்கள் மற்றும் இலவச சமூகக் கூட்டங்கள் பல பெங்களூரில் உள்ளன என்றும், நாம் செலவழிக்கும் முறையில்தான் எல்லாமே இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.
கைநிறையச் சம்பளம் வாங்குவது போலத் தோற்றமளித்தாலும், அடிப்படைத் தேவைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும் செலவழித்த பிறகு கையில் எதுவும் மிஞ்சுவதில்லை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.



