இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்படும் விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனிக்கவனம் செலுத்தி விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. இதுபோன்ற தொடர் சம்பவங்கள் தமிழ்நாட்டின் கடலோர மீனவ கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும், தீராத மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவர்கள் பாரம்பரியமாக பாக் ஜலசந்தி கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் ஒரே முதலீடாக இருக்கும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், குடும்பத் தலைவர்கள் சிறைபிடிக்கப்படுவதும் மீனவக் குடும்பங்களை மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடுகிறது. எனவே, சிறையிலுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்டுத் தருவது அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாதது என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக புனரமைக்க வேண்டும். இக்குழுவின் கூட்டத்தை விரைந்து கூட்டி, இருதரப்பு மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து இலங்கை அரசிடம் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அந்நாட்டுக் காவலில் வாடும் 20 தமிழ்நாட்டு மீனவர்களையும், பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள 270 விசைப்படகுகளையும் தாமதமின்றி மீட்டுத் தாயகம் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் விஜய் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More : தவெக அமைச்சர்களுக்கு எதிராக பாய்கிறது மான நஷ்ட ஈடு வழக்கு! திமுகவுக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு!



