ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில், முந்தைய திமுக அரசை தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியதாக கூறி தவெக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் கிரானைட் அதிபர் வீரமணிக்கு எதிராக, முந்தைய திமுக ஆட்சியில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அவர் தப்பிக்க வைக்கப்பட்டதாக அமைச்சர்களான சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுவெளியில் பேட்டி அளித்திருந்தனர். மேலும், தவெக ஐ.டி. விங் மூலமாகவும் எக்ஸ் தளத்தில் திமுகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், வீரமணி மீது 2025 அக்டோபர் 6-ல் புகார் வந்தவுடனேயே அடுத்த நாளே வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதாகவும், எவ்வித தாமதமும் பாரபட்சமும் இன்றி காவல் துறை செயல்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனவே, திமுக மீது பழி சுமத்திய அமைச்சர்கள் இருவர் மற்றும் தவெக ஐ.டி. விங் ஆகியோர் தலா ரூ.1.01 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகள், வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “அமைச்சர்கள் மீது வழக்கு தொடரும் முன் உரிய சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்பதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதிட்டார். ஆனால் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “அமைச்சர்கள் என்ற பொறுப்பில் அல்லாமல், தனிநபர்களாகவே அவர்கள் பொதுவெளியில் அவதூறு பரப்பியதால் தனிநபர் முறையிலேயே எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, வீரமணி விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்திப் பேசிய அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக ஐ.டி. விங் மீது உரிமையியல் அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.



