கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கை ED கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், 84 வயதான கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த போக்சோ வழக்கின் விசாரணை தற்போது தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இதற்கிடையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களான சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகிய இருவர் பிணை கோரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தங்களது கூட்டு ஜாமீன் மனுவில் மனுதாரர்கள் தெரிவிக்கையில், “சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் ஆண்டு 2019, ஆனால் இதற்கான முதல் தகவல் அறிக்கை அக்டோபர் 2025-இல் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்வதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினர். மேலும், புகார் அளித்தவர் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவர்களின் பெற்றோர்/காப்பாளரோ அல்ல என்றும், விசாரணைகள் பெருமளவில் முடிவடைந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டுவிட்டதால் தங்களால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பில்லை என்றும் வாதிட்டனர். மேலும் நான்கு வாரங்களாகத் தங்களைக் காவலில் வைத்துள்ள காவல் துறை, இதுவரை தங்களை விசாரணைக்காகக் காவலில் கோரவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து அரசுத் தரப்பு வாதிடுகையில், கைதின் போது அனைத்து சட்ட நடைமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டு, எவ்வித தாமதமுமின்றி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நடுவரிடம் ஆஜர்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படுவதாகக் கூறிய காவல் துறை, எதிரிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தீவிரமாக எதிர்த்தது.
இதையடுத்து, கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரணையில் நிலவும் குளறுபடிகள் மற்றும் தீவிர மறுஆய்வுக்கு மத்தியில், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதாவது, வீரமணி வழக்கு முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தபோது, அருண் ஐ.பி.எஸ் சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். அரசின் இந்த நடவடிக்கை மூலம் அவர் தற்போது எந்தவொரு தீவிரப் பொறுப்பிலும் இருக்கமாட்டார்; இருப்பினும், பணியில் தொடர்வதோடு வழக்கமான ஊதியத்தையும் பெறுவார். இதனிடையே, கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கினை விசாரித்த உதவி ஆணையர் யாஸ்மினும் காலிப் பணியிட ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஜெம் வீரமணிக்கு எதிரான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகாரை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அதில் கூடுதல் ஆணையர் பிசி தேன்மொழி ஐபிஎஸ், இணை ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ், முத்தரசி ஐபிஎஸ், விவி கீதாஞ்சலி உதவி ஆணையர் என 4 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கில் கைதான, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரனிட்ம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் வீரமணி எத்தனை ஆண்டுகள் சிறுமிகளிடம் அத்துமீறினார், வீரமணியின் வீடியோவை வைத்து யார் யாரிடம் பணம் பறிக்கப்பட்டது. வேறு யாரெல்லாம் சிறுமிகளிடம் அத்துமீறினர் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தற்போது தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத் துறை களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வழக்கை மூடி மறைக்க கோடிக்கணக்கான பணம் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பலருக்கு கைமாறியதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பி எம் எல் ஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தால் பல முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



